பதிவு செய்த நாள்
13
ஜன
2017
12:01
கம்பம்: தேனிமாவட்டம் கம்பத்தில் உள்ளது நந்தகோபாலன் சுவாமி தம்பிரான் மாட்டுத் தொழு. காமுகுல ஒக்கலிக மக்களின் புண்ணியத்தலமாக விளங்கிறது.
மாடுகளை இறைவனின் அம்சமாக பார்ப்பதால், மாட்டுத் தொழுவை தான் கோயிலாக வழிபடுகின்றனர். இங்கு சுவாமி விக்ரகங்கள் ஏதும் இல்லை. ஆரம்ப காலத்தில் சாதாரண மரவேலியால் அமைக்கப்பட்டிருந்த மாட்டுத் தொழு, தற்போது கோயிலாக கட்டியுள்ளனர். மாடுகளை அடைப்பதற்கு தொழுவம் உள்ளது. அதில் பக்தர்கள் தானமாக வழங்கும் கன்றுகள் அடைக்கப்பட்டிருக்கும். இதில் உள்ள காளை மாடுகளில் இருந்து பட்டத்துக் காளை ஒன்று தேர்வு செய்யப்படும். அதாவது தற்போது இருக்கும் பட்டத்துக் காளை இறந்து விட்டால், மன்னர் பட்டம் சூட்டுவது போல, அடுத்த காளையை தேர்வு செய்வர். அந்தக்காளைக்கு இங்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதே அதற்கு காரணம்.
பட்டத்துக்காளை தேர்வு செய்ய கையாளும் முறை, இறைவனின் அற்புதங்களில் ஒன்று என்று தான் கூற வேண் டும். தேர்வு நாளன்று கோயில் வளாகத்தில் நடுநாயகமாக உள்ள தொழுவத்தில், தீப ஆராதனைகள், அபிஷேகங்கள் செய்து, தொழுவத்தில் உள்ள மேடை ஒன்றில் பால் காவடி ஒன்றையும், பச்சை சோகைகளுடன் கூடிய கரும்பு கட்டுக்களையும் வைப்பர். சுற்றி மக்கள் கூட்டம் திரண்டிருக்கும். அம்மக்களின் பாரம்பரிய மேளமான உருமி அடிக்க, அந்த கரும்பு கட்டுக்களின் பச்சை சோகைகளை எந்தக் கன்று, அல்லது காளை மாடு முதலில் கடிக்கிறதோ, அந்த காளைக்கு பட்டம் சூட்டுவர். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி நின்று ஆரவாரம் செய்யும் இந்த நிகழ்ச்சியில் கரும்பு கட்டுகளை பார்த்தவுடன் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு, தின்பதற்கு ஓடி வரும். ஆனால் குறிப்பிட்ட ஒரு காளை மட்டும், பால்காவடியை முகர்ந்து பார்த்து, கரும்பு சோகையை கடிக்கும். அவ்வாறு சோகையை கடிக்கும் காளைக்கு மஞ்சள் பொடி துாவி, பட்டுத் துண்டு கட்டி, பட்டத்து காளையாக தேர்வு செய்வர்.
அந்த காளைக்குத் தான் இந்த கோயிலில் தொடர்ந்து பூஜை நடைபெறும். கடைசியாக இந்த கோயிலில் பட்டத்துக்காளை தேர்வு கடந்த 1997 ல் நடந்துள்ளது. அதே போல பட்டத்துக்காளை இறந்துவிட்டால், அதன் உடலை அடக்கம் செய்வதற்கு பல்வேறு சடங்குகள் செய்யப்படும்.
ஒக்கலிக சமுதாயத்தினர் கூறுகையில், தை மாதம் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கலன்று பிறக்கும் கன்றுகளை, இந்த கோயிலிற்கு தானமாக வழங்கும் பழக்கம் இப்பகுதியில் கடந்த 400 ஆண்டுகளாக உள்ளது. பசுக்களை கிருஷ்ணரின் அம்சமாக பார்க்கிறோம். அவ்வாறு வழங்கப்படும் கன்றுகள் இங்குள்ள தொழுவில் வைத்து பராமரிக்கப்படும், என்கின்றனர்.