பதிவு செய்த நாள்
16
ஜன
2017
12:01
பழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. நெய்க்காரப்பட்டிபேரூராட்சி பெரியகலையம்புத்துாரில் வள்ளுவர் சமுதாய மக்கள் சார்பில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டி அப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினத்தை விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்தாண்டு நேற்று திருவள்ளுவர் தினத்தில் 5அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பொங்கல், கரும்பு படைத்து தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தது. பள்ளி மாணவர்கள் திருக்குறள் படித்தனர். திண்டுக்கல், கோவை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், பழநி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராள மக்கள் திருவள்ளுவரை வழிபட்டனர். மாணவர்களுக்கான பேச்சுபோட்டி, கவிதை போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை அம்மன், திருவள்ளுவர் நற்பணி மன்றத்தினர், விழா கமிட்டியினர் செய்தனர்.
திருவள்ளுவருக்கு இடமில்லை: திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் திருவள்ளுவர் இலக்கிய பேரவை சார்பில், திருவள்ளுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் துரைமுருகையா, கணேசன், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., மணிமாறன் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல்லில் நிறுவுவதற்காக அரை டன் எடை, ஐந்தடி உயரத்தில் மகாபலிபுரத்தில் வெண்கலத்தில் சிலை தயாரானது. அதனை கடந்த 2000 முதல் ஆட்சியாளர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் சிலையை பாவேந்தர் கல்விச் சோலையில் வைத்து வழிபடுகிறோம். அன்றுமுதல் பொது இடத்தில் நிறுவ முட்டுக்கட்டை ஏற்படுத்தப்படுகிறது. வடமாநில எம்.பி.,தருண்விஜய் தேசிய அளவில் பல இடங்களில் வள்ளுவர் சிலையை நிறுவி வருகிறார். ஆனால் தமிழகத்தில் இடம்தர மறுக்கின்றனர். தற்போது மாநகராட்சி வளாகத்தில் நிறுவ தமிழ்வளர்ச்சித்துறை முன்வந்துள்ளது. அதேசமயம் வேறு இடத்தையும் ஆய்வு செய்கிறார்கள், என்றனர்.