பதிவு செய்த நாள்
17
ஜன
2017 
01:01
 
 பழநி;பழநி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களிடம் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டு விலை ரூ.150 வரை விற்கின்றனர். பழநி தைப்பூசத்திருவிழா வருகிற பிப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலைக்கோயிலில் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தேங்காய் விற்பனை அதிகரிப்பு: பாதயாத்திரை வரும் பக்தர்கள் கிரிவீதியை வலம் வரும் போது, அப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகர் கோயிலிலும், மலைக்கோயில் வெளிப்பிரகார நுழைவுப்பகுதியிலும் விடலைத் தேங்காய் (சிதறுகாய்) உடைத்து வழிபடுகின்றனர். இதனால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது. அதிகளவில் பக்தர்கள் தேங்காய் வாங்குவதால் விற்பனையாளர்கள், வெளிமார்க்கெட்டில் ரூ.4 முதல் 8 வரை விற்கப்படும் தேங்காய்களை ரூ.15 முதல் 20 வரை விலையை ஏற்றியுள்ளனர். வாழைப்பழம், தேங்காய், பூ, பத்தி, சூடம்,வெற்றிலை, பாக்கு, விபூதி, சந்தனம், மாலை அடங்கிய பூஜைதட்டு விலை ரூ.80 முதல் 150 வரை விற்கின்றனர் இதனால் பக்தர்கள் அதிகவிலை கொடுத்து வாங்கி சிரமப்படுகின்றனர்.