பதிவு செய்த நாள்
19
ஜன
2017
05:01
மார்கழி மாதம் மூல நட்சத்திரம் மாருதியின் அவதாரத் திருநாள். இவர் சிவபெருமானின் அம்சமாக கேசரி - அஞ்சனை தம்பதியின் புதல்வராக ராமபிரானுக்கு சேவை செய்ய அவதரித்தார். அனுமனை வழிபட்டால், புத்திர தோஷம், ராகு-கேது தோஷம், சனி தோஷம் போன்ற பாதிப்புகள் குறையும்.
வாயு மைந்தன் ஆஞ்சனேயர் சூரியனை பழம் என நினைத்துப் பறிக்கப் பறந்தார். அச்சமயம் ராகு சூரிய கிரகணம் தோற்றுவிக்க சூரியனை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அனுமனின் வேகத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த ராகு. குழந்தை அனுமனிடம், யார் ஒருவர் எனக்குப் பிடித்தமான உளுந்தால் தயாரிக்கப்பட்ட பிரசாதத்தை உனக்குப் படைக்கிறாரோ, அவருக்கு ராகு தோஷ பாதிப்பு குறையும் என்று அருளினார். எனவே, ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் ராகு தோஷ பாதிப்பிலிருந்து மீளலாம்.
சீதை தனது நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தைக் குறித்து அனுமன் வினவ, ஸ்ரீராமரின் ஆயுள் பலத்துக்காக வைத்துள்ளதாக சீதை கூறினாள். இதைக் கேட்ட அனுமன் தன் உடலெல்லாம் சிந்தூரம் பூசிக்கொண்டார். எனவே, இவருக்கு சிந்தூரம் சாற்றி வழிபட, பலம், புகழ், தைரியம் கூடும்.
அசோகவனத்தில் சீதை தன்னை வணங்கிய அனுமனின் சிரசில் வெற்றிலையை வைத்து, சிரஞ்சீவி பவ என ஆசிர்வதித்தாள். இதனால், வெற்றிலை மாலை அனுமனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாயிற்று.
சனி பகவான் தன் சக்தியைக் காட்ட முடியாமல் தோற்றது அனுமனிடம் மட்டும்தான். சனி தோஷம் அகல அனுமனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவர். வெண்ணெய்க் காப்பு இவருக்கு மிகவும் விசேஷம். எலுமிச்சைமாலை, துளசி மாலை, புஷ்ப மாலை சாற்றி இவரை வழிபட நீண்ட ஆயுள், உடல் வலிமை, கல்வி, செல்வம், பலம், புகழ், வாக்கு வன்மை, வெற்றி, நினைத்த காரிய ஜயம் பெறலாம்.
ஸ்ரீராம் என்ற ராம நாமம் ஜபிப்பவருக்கு ஆஞ்சனேயர் என்றென்றும் அருளாசி புரிவார். சஞ்சீவி மலையை பெயர்த்து வந்த அனுமனை அனுதினமும் வழிபட, உடல் ஆரோக்கியம் பெறலாம்.
சர்வ கல்யாண தாதாரம்
சர்வாபத் கன மாருதம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்சநேயம் நாமாம்யஹம்
என்ற துதியைக் கூறி அனுமனை வழிபட்டு சகல நலமும் பெறுவோம்.