பதிவு செய்த நாள்
25
ஜன
2017
12:01
பழநி: பழநி ஞானதண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை(பணம்) செலுத்த இ- உண்டியல் வசதி நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இக்கோயிலில் 17 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்படுகிறது. இதில் ரூ.ஒருகோடிக்கு மேல் வசூல் ஆகிறது. இந்நிலையில் தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகள் , மூலமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இ உண்டியல்: கோயிலில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் இடம் அருகே எஸ்.பி.ஐ., வங்கி மூலம் டிபாசிட் இயந்திரம் இ- உண்டியல் கடந்த நவம்பரில் வைக்கப்பட்டது.அது நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் ரூ.100, ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை பக்தர்கள் டிபாசிட் செய்கின்றனர். பக்தர்கள் செலுத்திய பணம், நேரம், தேதி விபரங்கள் மற்றும் பழநியாண்டவர் அருள்பெறுக என ஆங்கிலத்தில் ரசீதும் வருகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி வரும் பக்தர்கள் டிபாசிட் இயந்திரத்தில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமும், ரூபாய் நோட்டுகளை வழங்கியும் காணிக்கை செலுத்தலாம். அவை நேரடியாக கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பிற இடங்களில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.