பதிவு செய்த நாள்
25
ஜன
2017
11:01
காஞ்சிபுரம் : கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லாமல், கண்ட இடத்தில் நிறுத்துவதால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஆன்மிக தலங்களில் ஒன்று. அதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த, கோவில் அருகில் இடம் இல்லாத காரணத்தால், பிற சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர். இதனால், அந்தந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பல்வேறு திட்டங்களில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுமா என்பது சந்தேகம் தான். யாத்ரீகர்கள் தங்கும் வசதி, அவர்கள் வாகனங்கள் நிறுத்த இட வசதி போன்றவற்றை ஏற்படுத்தினால், பிற மாநிலத்தவர் வருகை அதிகரிக்கும். அதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் ஏற்கனவே உள்ள மின் விளக்கு, சாலை போன்ற வசதிகளையே மீண்டும் செய்வதால் வீண் செலவாகிறது. அதனால், யாத்ரீகர்களுக்கு எந்த பயனும் இல்லை என, புகார் எழுந்துள்ளது.