பதிவு செய்த நாள்
28
ஜன
2017
12:01
திருப்பூர்: தை அமாவாசையை முன்னிட்டு, நீர் நிலைகளுக்கு சென்று, முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தை அமாவாசையன்று, முன்னோர்களுக்கு திதி கொடுத்து, அவர்களுக்கு விருப்பமான உணவு பதார்த்தங்களை தயாரித்து, படையலிட்டு வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதையொட்டி, திருப்பூர் சுற்றுப்பகுதி கோவில்களில் உள்ள நீர்நிலைகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமுருகன்பூண்டியில் உள்ள, திருமுருகநாதசுவாமி கோவில் குளக்கரையில், ஏராளமானவர்கள் நேற்று, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். பார்க் ரோடு, நொய்யல் கரை ராகவேந்திரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களில், நீர் நிலைகளுக்கு அருகே, ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வணங்கினர். தை அமாவாசையையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரம் நடைபெற்றது.