பதிவு செய்த நாள்
31
ஜன
2017
11:01
தமிழகத்தில், பாரம்பரியமாக சேவல் சண்டை நடத்தப்பட்டது, விழுப்புரத்தில் உள்ள 1600 ஆண்டுகள் பழமையான சேவல் கல்வெட்டு மூலம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் உள்ள, பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில், சேவல் தொடர்பான கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு, கடந்த 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அப்போது செயற்பொறியாளராக இருந்த கொடுமுடி சண்முகம் பாதுகாத்து வைத்துள்ளார். கல்வெட்டு குறித்து, விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், அரசலாபுரம் கிராமத்தில் இருந்து, இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில், நின்ற நிலையில் கம்பீரமான தோற்றத்தில், 62 செ.மீ., உயரம், 55 செ.மீ., அகலம் கொண்டதாக சேவல் செதுக்கப்பட்டுள்ளது.
சேவலின் முதுகுபுறத்துக்குமேல், தமிழ் மொழி வட்டெழுத்தில் இரண்டு வரிகளிலும், சேவல் கால்களுக்கு முன்பாக கடைசி வரியும் எழுதப்பட்டுள்ளது. இதில், முகையூரு மேற்சே, ரிகு யாடிக, ருகிய கோழி என பிரித்து குறிப்பிட்டுள்ளது. இதற்கு, முகையூர் என்ற ஊரின் மேற்சேரியில் நடந்த சேவல் சண்டையில், இறந்துபட்ட சேவல் என்பது பொருள். இந்த கல்வெட்டு கி.பி., 4ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்பதால், சேவல் சண்டையானது, 1600 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கல்வெட்டு, தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு, முனைவர் ரமேஷ் கூறினார். இந்த சேவல் கல்வெட்டு, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புதர்களுக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சின்னமாக திகழும் கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என, ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். –நமது நிருபர்–