பதிவு செய்த நாள்
08
பிப்
2017
11:02
தஞ்சாவூர்: உலகிலேயே மிகப்பெரிய அளவில், 108 அடி உயரத்தில், அம்மனுக்கு ஐம்பொன் சிலை வடிவமைக்கும் பணிகள், சுவாமி மலையில் துவங்கின.கோவில் நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் அருகே, சித்தர்கள், மகான்கள், ஞானிகள் மற்றும் பன்னிசையாளர்கள், பல நுாற்றாண்டுகளாக, சக்தி வாய்ந்த, தோற்ற முடைய அம்மனை, காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் திருமால்பூர் அருகே, நெல்வாய் கிராமத்தில், சக்தி வாய்ந்த தோற்ற முடைய அம்மன் அருள்ஞான சித்தர் பீடம் சார்பில், அம்மனுக்கு, 108 அடியில், ஐம்பொன்னால் ஆன சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், 1,000 கிலோவில் தங்க மாங்கல்யமும், 108 அடி ஐம்பொன்னால் ஆன சூலமும் பிரதிஷ்டை செய்து வழிபட முடிவு செய்யப்பட்டது.இதன்படி, அம்மனுக்கு, 108 அடியில் ஐம்பொன் சிலை வடிவமைக்கும் பணி, கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை குபேரன் சிற்பக் கலைக் கூடத்தின், குபேரன் ஸ்தபதி சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணியை, ஐந்து ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணியின் துவக்க விழா, நேற்று முன்தினம், சுவாமிமலை சில்பகலா ஆன்மிக மையத்தில் நடந்தது. சுவாமி மலை ராமலிங்கம் ஸ்தபதி தலைமை வகித்தார். உலக அளவில், மிகப்பெரிய ஐம்பொன் விக்ரகம் வடிவமைக்கப்பட உள்ளதால், அதை, சுவாமி மலை ஸ்தபதிகளின் ஒத்துழைப்புடன் செய்வது குறித்து, மோகன்ராஜ் ஸ்தபதி விளக்கமளித்தார்.