பழநியில் தொடரும் தைப்பூச விழா : காவடிகளுடன் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2017 11:02
பழநி: பழநிமலைக்கோயிலில் குவிந்த தைப்பூச விழா பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இரண்டு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசவிழா பிப்.,12ல் முடிந்தபின்னரும் பழநி ஞானதண்டயுதபாணிசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வந்தவண்ணம் உள்ளனர். மலைக்கோயிலில் நேற்று அதிகாலை முதல் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒரு மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். கேரளாவை சேர்ந்த பக்தர்கள் வண்ண காகித பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூ கரகம் எடுத்து ஆடிவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து ஆட்டம் பாட்டத்துடன் கிரிவலம் வந்து மலைக்கோயிலில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டனர், இரவு தங்கரதப் புறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.