பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
ப.வேலூர்: சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவிலில், விநோத அசைவ அன்னதான விழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, சேளூர் சாணார்பாளையத்தில், திருப்பதி முனியப்பசாமி, 40 அடி உயரத்துடன், ஒரு டன் எடையுள்ள வாளுடன் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் முதல் சனி, ஞாயிறு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம். தற்போது, 25வது ஆண்டாக அசைவ அன்னதான விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. சுவாமிக்கு வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள் காணிக்கையாக, 195 ஆட்டுகிடாக்களை நேற்று முன்தினம் கோவில் விழாக்குழுவினரிடம் வழங்கினர். அவர்கள், நேற்று முனியப்பசாமிக்கு பலியிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் சுவாமியை வணங்குவது போல், இந்த கோவிலிலும் பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துடன் வழிபாடு நடத்தினர். மொத்தமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மறுபூஜையாக, 200க்கும் மேற்பட்ட கோழிகளை, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் காணிக்கையாக அளித்திருப்பதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர். முன்னதாக, பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து, தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின், ஆடு, கோழிகளை தானமாக வழங்கினர். அதை கோவில் நிர்வாகிகள் பலியிட்டு அன்னதானம் செய்தனர்.