பதிவு செய்த நாள்
22
பிப்
2017
12:02
பழநி: ஆன்மிக சுற்றுலா தலமான பழநியில் பாலிதீன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், உணவுப் பொருட்களை கொண்டு வரும் பாலிதீன் பைகளால் குரங்குகளும் பாதிக்கப்படுகின்றன. எதிர்கால தலைமுறையையும் பாதிக்கும், பாலிதீன் பயன்படுத்த தடை என்பது பழநியை பொறுத்தமட்டில், பெயரளவில் மட்டுமே உள்ளது. பழநி அடிவாரம், பஸ் ஸ்டாண்ட், கிரிவீதி ஆகியபகுதிகளில் ஓட்டல், டீக்கடை, தள்ளுவண்டி கடைகளில் பாலிதீன் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதிகாரிகள் திடீர் சோதனை என்ற பெயரில், கண்துடைப்பு நாடகமே நடத்துகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், பாலிதீன், பிளாஸ்டிக் உபயோகம் முழுமையாக கட்டுப் படுத்தப்படாத நிலை உள்ளது. முறையாக சுத்திகரிக்கப்படாத, காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள், உணவுப் பொருட்களை, பாலிதீன் பைகளில் வைத்து விற்கின்றனர். இதனால் குப்பைத் தொட்டிகளில் அதிகளவில் குவிந்துள்ளன.
விலங்குகள் பாதிப்பு: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் உணவு சாப்பிட்டு குப்பைத் தொட்டியில் போதும் பாலிதீன் பொருட்களை குரங்குகள் எடுத்துச் சென்று சாப்பிடுகின்றன. மேலும் பழநிகொடைக்கானல் ரோடு ஓட்டியுள்ள வனப்பகுதிகளிலும் ஏராளமான பாலிதீன் குப்பை கிடக்கிறது. அவற்றை சாப்பிடும் குரங்கு, காட்டுமாடு, மான் உள்ளிட்ட விலங்குகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. ஆகையால் பழநியில் பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த திண்டுக்கல் கலெக்டர் வினய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.