பதிவு செய்த நாள்
22
பிப்
2017
12:02
திருப்பூர்: திருப்பூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புராதன சின்னமான இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி-புளியம்பட்டி சாலையில் உள்ள ஆலந்தூரில், 1,100 ஆண்டுகள் பழமையான, அமணீஸ்வரர் கோவில் உள்ளது. பண்டைய கொங்கு நாட்டின் வட பரிசார நாட்டில், அக்கால வணிகர்கள் பயன்படுத்திய பெருவழியில், இக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், மைசூரு பகுதியில் இருந்து வந்த சமண மதத்தினர், இங்கு குடியேறி, வீரசங்காக பெரும்பள்ளி அணியாதழகியார் என்ற சமணர் கோவிலை கட்டினர்.
அழகிய வேலைப்பாடுகள்:
இப்பெயரே காலப்போக்கில் மருவி, அமணீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. முழுவதும் கற்களால், அழகிய வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக, இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில், கருவறை முன்மண்டபம் மற்றும் கோவில் தெப்பக்குளம் என, அற்புதமான கலை நயத்துடன், கோவில் விளங்கிறது. கோவில் தூண்கள், மேற்கூரை ஆகியவற்றில், சிற்ப வேலைப்பாடுகள் மிகுதியாக காணப்படுகின்றன. பெரிய தூண்களில், பல்வேறு சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கருவறை முழுவதும், அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. கருங்கல்லிலேயே வெளிச்சமும், காற்றும் உள்ளே புகும் வகையில், வியத்தகு தொழில் நுட்பத்தில், ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.,10ம் நூற்றாண்டில், கொங்கு சோழன். ஆலத்தூர் கோவிலுக்கு வரி வருவாய் வழங்கினார். இக்கோவில், 12ம் நூற்றாண்டில், குலோத்துங்க சோழன் காலத்தில், அவிநாசி கோவிலுக்கு, தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஆலத்தூர் ஊர் சபை நிர்வாகிகள், ஆறு நாட்டாரின் சபைக்கு, இப்பிரச்னையை கொண்டு சென்றனர். ஆறு நாட்டார் சபை தீர்ப்பில், இரு கோவிலுக்கும் வரிவருவாயை பயன்படுத்த, தீர்ப்பு வழங்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. பழங்கால அரசு நிர்வாகம்,
இடிந்து விழும் அபாயம்:
தொன்மை வாய்ந்த இக்கோவில், இன்று சிதிலம் அடைந்துள்ளது. கருவறை சேதமடைந்து காணப்படுகிறது. முன் மண்டபத்தில், பல இடங்கள் <உடைந்துள்ளன. சுற்றிலும் மரங்கள், முட்செடிகள் வளர்ந்துள்ளன. கோவில், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. குளம், மண்ணால் மூடப்பட்டு, தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. இக்கோவிலின் சிறப்பை அறிந்து, மதிப்பு மிகுந்த கோவில் சிலைகளை காப்பாற்றும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், கோவையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அமணீஸ்வரர் கோவிலின் பழம் பெருமையை கருதி, புராதன சின்னங்கள் பாதுகாப்பின் கீழ், இக்கோவிலை சீரமைக்க வேண்டும் என்பதே, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் அவிநாசி வட்டார மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.