பதிவு செய்த நாள்
22
பிப்
2017
02:02
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மேல்சூடாபுரம் பகுதியில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் கருவறை, அதை ஒட்டிய அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம், வரலாற்றை தாங்கி நிற்கின்றன. கருவறையில் இருந்து, கோபுரத்தின் உச்சிவரை, கருங்கல் மூலம் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சோழர் கால வரலாற்றின் முக்கிய நினைவு சின்னமாக <உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், தற்போது அழியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, வரலாற்று தேடல் குழுவைச் சேர்ந்த, அறம் கிருஷ்ணன் கூறியதாவது: ஏகாம்பரேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர், பாதிக்கும் மேல் இடிந்த நிலையில் உள்ளது. கோவில் முழுவதும், மரம், செடி படர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.
கோவிலில் மொத்தம், நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில், இரு கல்வெட்டுகளை தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. இருகல்வெட்டுகளில், சோழ மண்டலங்களை பற்றிய குறிப்பு <உள்ளது. மற்றொரு கல்வெட்டில், ஹொய்சாளர்களின் கடைசி அரசனான, மூன்றாம் வல்லாளன் கொடுத்த தானங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. கி.பி., 1301ல், மன்னன், மூன்றாம் வல்லாளன் அரசாணை ஒன்றை வெளியிடுகிறான். அதில், அளேகுந்தாணி ராஜ்யத்தில் உள்ள நாடுகளில் இருந்து கிடைக்கும் வரித்தொகையை, அந்ததந்த நாட்டில் உள்ள கோவில் வழிபாட்டிற்கும், அமுது படைக்கவும் செலவிடுமாறு, கோவில் மடாதிபதிகளுக்கு ஆணை பிறக்கப்பட்டுள்ள செய்தியை, கல்வெட்டு விளக்குகிறது. வரலாற்றை தாங்கி நிற்கும் சோழர் கால ஏகாம்பரேஸ்வரர் கோவிலை, மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் சீரமைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.