பதிவு செய்த நாள்
01
மார்
2017
11:03
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு, தினமும் தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மலைக் கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாமல், பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, திருத்தணி, பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில், மலைக் கோவிலில், 3.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்படும் இயந்திரம் பொருத்தப்பட்டது. இதன் மூலம், பக்தர்களுக்கு குடிநீர் குழாய்கள் வசதி ஏற்படுத்தப்பட்டு, குடிநீர் வினியோகம் நேற்று முதல் துவங்கப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று, கோவில் தக்கார் ஜெய்சங்கர் தலைமையில் நடந்தது. இணை ஆணையர் சிவாஜி வரவேற்றார். இதில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரமேஷ்பாபு துவக்கி வைத்தார். சுத்திகரிக்கப்பட்ட இயந்திரம் மூலம், ஆறு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு, 1,000 லி., குடிநீரை சுத்திகரிக்க முடியும்.