பதிவு செய்த நாள்
06
மார்
2017
04:03
வழிபாடுகளில் நட்சத்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுப நட்சத்திர நாளிலும், விரத காலங்களிலும், வாரத்தின் ஏழு கிழமைகளிலும் வீட்டிலோ கோவிலிலோ சிவபெருமானைப் பூஜிக்க வேண்டுமென்றும், இறைவனுக்கும் நட்சத்திரத் திருவிழா செய்ய வேண்டுமென்றும் சைவாகமங்கள் கூறுகின்றன. அதிலும் திருவாதிரை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்ததென்றும், ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய திருவாதிரை மேலும் சிறப்பானதென்றும் கூறப்படுகிறது. இத்தகைய வழிபட்டால் விளையும் சிறப்புப் பயன்களையும் எடுத்துக் கூறி, விரதகால வழிபாட்டைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றன. மேலும் நட்சத்திரங்களில் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், பூஜைகளுக்குரிய காலநிர்ணய விதிமுறைகளை சிவாகமங்கள் கூறியுள்ளன.
அதாவது சூரிய அஸ்தமனத்திலிருந்து சந்திர உதயம்வரை உள்ள காலம் நட்சத்திர விரத உபாசனத்திற்கான காலமாகும். ஆனால் திருவாதிரை மற்றும் திருவோண நட்சத்திரங்களுக்கு இதனைத் தவிர்த்து நாள் முழுவதும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். சூரிய அஸ்த மனத்திலிருந்து மூன்று முகூர்த்த காலம் - ஏழரை நாழிகை (மூன்று மணி நேரம்) நட்சத்திர உபவாசம், ஸ்நானம், பூஜைகளுக்குரிய காலமாகும்.
இவ்வாறாக நட்சத்திர விரத பூஜை காலத்தை நன்கறிந்து, அந்நாளில் சிவனைக் குறித்தோ, விஷ்ணுவைக் குறித்தோ பூஜை, ஜெபம், உற்சவம், தானம் இவற்றைச் செய்து யாவரும் அரிய பயனை விரைவில் பெறலாம். பூஜை, விரதம் விழா ஆகியவை ஆதிரையில் செய்யப்படின் கோடிமடங்கு உயர்ந்ததாகி அனைத்துப் பயனையும் தரும் என்றும், ஆதலால் சைவ சமயத்தோர் யாவரும் தவறாது திருவாதிரை நட்சத்திரத்தன்று பன்னிரு மாதங்களிலும் விரதமிருந்து, இரவில் பூஜையையோ, கோயிலில் தரிசனத்தையோ, தேவதா உற்சவத்தையோ, ஸ்நானம், தானம், விப்ரபோஜனம் ஆகியவற்றையோ கட்டாயமாகச் செய்யவேண்டும் தவறினால் நரகத்தை அடைவர் என்றும் அறக்கட்டளையிடுவது இவ்வாறே வைணவர்கள் திருவோணத்தில் விரதமிருந்து விஷ்ணுவை ஆராதித்து வைகுண்ட பதத்தை அடையலாம்.
நட்சத்திர விரதம்: உரிய நட்சத்திரம் கூடிய அன்று, அதிகாலை முதலே, தலைமுழுக்கு நீராடி, உபவாசத்துடன் அறநெறியில் வாழ்ந்து இறைவனைப் பூஜித்து, உரிய தானத்தைச் செய்தல் வேண்டும். தானத்தை வேதம் பயின்ற அந்தணருக்கு அளிப்பது உத்தம பயனைத்தரும். தேவையானவை அனைத்தையும் வரமாக எனக்குக்கொடு என்று வேண்டிடும் வேதப்பகுதியாகிய சமகம் எனும் பகுதி, ஸுதினம் ச மே என்று சுபதினத்தையும் ருக்ஷா ச மே என்று சுப நட்சத்திரத்தையும், முறையே அவை கூடிய சுபதினத்தையும் குறிப்பிடுகிறது. இதிலிருந்து அருள்கிட்டுவதற்கு அத்தகைய நன்னாளின் தேவை விளங்கும். இறைவனை வணங்கவும், அவனவருள் தேவை என்பதை மணிவாசகர், அவனருளாலே அவன் தாள் வணங்கி என்கிறார் திருவாசகத்தில்.
28 நட்சத்திரங்களில் (அபிஜித் உட்பட) விரத பூஜையுடன் செய்திடும் சிவ உற்வசத்தின் பயன்களை சிவாகமம் குறிப்பிடுகிறது.
1. கிருத்திகையில் சவுக்கியத்தையும்
2. ரோகிணியில் மகனை விரும்பியவன் மகனையும்;
3. மிருகசீரிடத்தில் தேகப் பொலிவழகையும்;
4. திருவாதிரையில் விரத பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் (ஸர்வ ஸம்பத்);
5. புனர் பூசத்தில் அரசரின் விருந்தோம்பலுடன் கூடிய நட்பையும்;
6. பூசத்தில் (புஷ்டி) வளத்தையும்;
7. ஆயில்யத்தில் சிறந்த பிள்ளைகளையும்;
8. மகத்தில் தன் மக்களிடம் மேம்பட்ட வாழ்வையும்;
9. பூரத்தில் ஸௌபாக்யத்தையும்;
10. உத்திரத்தில் மிகச் சிறந்த வள்ளல்குண ஒழுக்கத்தையும், கொடைத்தகுதியையும் (பிறருக்கு வழங்கி மகிழும் உள்ளத்தையும் பெறுதல்);
11. ஹஸ்தத்தில் ஹரனைப் பூஜிப்பவன் நல்லோர் நடுவில் உயர்வையும்;
12. சித்திரையில் பூஜிப்பவன் அழகு வாய்ந்த மனைவியையும்;
13. ஸ்வாதியில் (செய்தொழில்) வியாபார லாபத்தையும்.
14. விசாகத்தில் அதிக சுகம் தரும் இந்திரபோக விருப்பத்தையும்;
15. அனுஷத்தில் இந்திரபோக ஆதிபத்தியத்தையும்;
16. கோட்டையில் செல்வப்பெருக்கையும்;
17. மூலத்தில் உத்தமமான ஆரோக்கியத்தையும்;
18. பூராடத்தில் புகழையும்;
19. உத்திராடத்தில் மிக உயர்ந்த புகழின் உச்சத்தையும்;
20. திருவோணத்தில் சுகங்களையும் பொருள் போகங்களையும்;
21. அவிட்டத்தில் நல்ல தன மிகுதியையும்; அபிஜித்தில் வேத விக்ஞானத்தையும்;
22. சதயத்தில் மருத்துவ சித்தியையும் (தேகாரோக்கியம்),
23. பூரட்டாதியில் ஆடு, மாடு, வாகனங்களின் போகத்தையும்;
24. உத்திரட்டாதியில் கோகுல பசுக்களின் செல்வத்தையும்;
25. ரேவதியில் விஷ்ணுவிடம் நட்புப் பயனையும் (வைகுண்டபத போகம்);
26. அச்வினியில் சிறந்த குதிரைச் செல்வத்தையும்;
27. பரணி நட்சத்திரத்தில் விரத பூஜையைச் செய்பவர் உத்தமமான பூரண நீண்ட ஆயுளையும் நட்சத்திர பூஜையின் பயனாகப் பெறுகிறார்.
ஆதலால் அனைத்து வகையிலும் பெரு முயற்சியோடு நட்சத்திர புண்ணிய காலங்களில் இந்த விரத பூஜையுடன் கோயில் தேவைக்கு உற்சவத்தையும் செய்து பயன் பெறலாம். இவற்றிலும் ஆதிரையில் பூஜை, உற்சவம் செய்வது பலமடங்கு உயர்வான பயனை அளித்திடும். திருவாதிரை தினத்தில் உபவாச விரதம் முதலியவற்றை செய்வது ஆயிரம் அச்வ மேத யாகத்தின் பயனையும் கோடி கன்னிப் பெண்களை (பிறர் குலம் தழைக்க) தான மளித்த பெரும்பயனையும் அளித்திடுவதாகும். ஆதலால் புண்ணியரூபமாக ஒளிர்கின்ற நட்சத்திரங்களில் அனைத்து வகையினரும், பொதுமக்கள் யாவரும் சிறப்புப்பயனை விரும்புகிற கன்னிப் பெண்கள், விதவைகள், சுமங்கலிகள், சன்யாசி, விரதீ, தீக்ஷிதர், தீட்சை பெறாதவர் யாராயினும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் புண்ணிய காலத்திலும், விரத அனுஷ்டானத்துடன் வழிபாட்டை மேற்கொள்ள இயன்ற அளவில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, முன்னிரவில் இந்த நட்சத்திர காலம் கூடியிருக்கிற இரவு நேரத்தில், தீர்த்த ஸ்நானம், பூஜை, பிரதக்ஷிணம், நட்சத்திர ப்ரீதி தானம் செய்தல், தெய்வ தரிசனம், துதிபாடுதல், தரையில் விழுந்து வணங்குதல், கோயில் பிரதட்சிணம், அந்தணர்களுக்கு இயன்ற அளவில் பொற்காசு, புத்தாடை, அன்னம் ஆகியவற்றை வழங்கி தர்மங்களைச் செய்திட வேண்டும்.
இவ்விதமாக எவர் ஒருவர் செய்கிறாரோ, அவர் இவ்வுலகில் வாழும் ருத்ரராக (இறைவனாகவே) திகழுவார் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு நட்சத்திர விரத சாந்திக்கிரியைகளைப் பின்பற்றுவோர்களுக்கு பேராபத்துகள், கொடியதாகிய நவகிரகப் பீடைகள் முதலியவை விலகும். அனைத்து வகையான வியாதிகளிலிருந்தும் விடுபட்டவர்களாகி வெகுகாலம் சுகவாழ்வு பெறுவர், நட்சத்திர விரத பூஜையைத் தொடர்ந்து செய்பவர்கள் ஒரு வருட காலத்திற்குள்ளாக சத்புத்திரனை அடைவது உறுதி என்றும் சைவாகமங்கள் வலியுறுத்துகின்றன. இதனை ஆகம பத்ததி ஆசிரியர்களும், நித்தமும், சிவசூரியனின் பூஜையை முதற்கடமையாகக்கூறி வலியுறுத்தியுள்ளனர்.
செல்வங்களின் சிறப்புப் பூஜைக்கு உகந்த நட்சத்திரம், ஜென்ம நட்சத்திரம்
ஆகமங்களில் அனைத்து தெய்வங்களும் ஆவிர்பவித்த (வெளிப்பட்டு உதித்த) நட்சத்திரங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் சில தெய்வங்களுக்கு உரியவற்றை இங்கு காண்போம்.
1. அசுவினி நட்சத்திரத்தில் சண்டேசர். அச்வினி தேவர்கள், அச்வாரூடம் சரஸ்வதி, அங்காரகன்.
2. பரணி நட்சத்திரத்தில் யமதர்மராஜா, பூதங்கள் ருக்வேதம்.
3. கிருத்திகை நட்சத்திரத்தில் தண்டபாணியாகிய கந்தர், துர்க்கை, பூமி, அக்னி.
4. ரோஹிணி நட்சத்திரத்தில் சாமுண்டீச்வரி, பிரம்மதேவர், சப்தரோஹிணிகள், ரிஷிகள், கிருஷ்ணர், வாஸ்து, ப்ரஜாபதி, சுக்கிரர்.
5. மிருகசீரிட நட்சத்திரத்தில் சந்திரன்.
6. திருவாதிரை நட்சத்திரத்தில் (ஆதிரையில்) ஈச்வரர், சிவன், லிங்கம், மாஹேச்வர 64 மூர்த்தங்கள், காளி, பிரத்யங்கரா, பிராம்ஹி, முதலான ஏழு மாதர்கள், பிசாசுகள், ஈசானர்.
7. புனர்பூச நட்சத்திரத்தில் இந்திரன், பிரம்மா, மன்மதன், ராமர், யஜுர்வேதம்.
8. பூத நட்சத்திரத்தில் சந்திரர், வியாழன், குரு.
9. ஆயில்ய நட்சத்திரத்தில் நாகர் நாகராஜா, ராகு -கேது.
10. மக நட்சத்திரத்தில் ஆதித்யர், தேவிகவுரி, பித்ருக்கள், வாஸ்து.
11. பூர நட்சத்திரத்தில் கவுரி தேவியர், சூரியன், பகர், அர்யமா.
12. உத்திர நட்சத்திரத்தில் நடராஜர், அப்சரசுகள், தேவிகள், சீதை, பகர், அர்யமா, அம்பர், மகாகாளி, மகாலக்ஷ்மி.
13. ஹஸ்த நட்சத்திரத்தில் தட்சிணா மூர்த்தி, கின்னார மிதுனம், சூரியன், ஸவிதா, காச்யபரிஷி.
14. சித்திரை நட்சத்திரத்தில் க்ஷேத்ரபாலகர், த்வஷ்டா சூரியரில் த்வஷ்டா.
15. ஸ்வாதி நட்சத்திரத்தில் சாஸ்தா, வசுக்கள் எண்மர், வாயு, கருடன்.
16. விசாக நட்சத்திரத்தில் குஹர் என்னும் ஷண்முகர், பத்ரகாளி, தேவேந்திரன், அக்னிதேவர், உக்ரதேவர்.
17. அனுஷ நட்சத்திரத்தில் முனீச்வரன், ரிஷிகள்.
18. கேட்டை நட்சத்திரத்தில் ஜ்யேஷ்டாதேவி இந்திரன்.
19. மூல நட்சத்திரத்தில் தர்ம தேவதையான விருஷபதேவர், நதிதேவதைகள், சமுத்திரம், தீர்த்தங்கள்.
21. உத்திராட நட்சத்திரத்தில் சோமாஸ்கந்தர், வைச்வ தேவர்கள்.
22. அபிஜித் நட்சத்திரத்தில் பிரம்மா, தும்புரு, நாரதர்.
23. திருவோண நட்சத்திரத்தில் மகாவிஷ்ணு, மாருதி.
24. அவிட்ட நட்சத்திரத்தில் சக்திகள், வசுக்கள், குபேரன், புதன்.
25. சதய நட்சத்திரத்தில் விநாயகர், வருணர், நதிகள், கடல், தீர்த்தங்கள், நீர்நிலைகள்.
26. பூரட்டாதி நட்சத்திரத்தில் அதர்வண வேதம், அஜர், ஏசுபாதர், அகோரருத்ரர், வீரன், வீரேசர், சரபர்.
27. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நரசிம்மர், பரசுராமர், அஹிர்புத்னியர், வீரபத்ரர், விஷ்ணு, ஹரி, பாகவதர்கள்.
28. ரேவதி நட்சத்திரத்தில் பூமிதேவி, கங்கா தேவி, சனைச்சரன்.
பன்னிரு சூரியரில் பூஷா.
மூல நட்சத்திரத்தில் பக்த மூர்த்திகளும் எங்கும் எக்காலத்திலும் சிறப்பாகப் பூஜிக்கத்தக்கவர்கள். சைவ மூர்த்தங்களுக்கும் அனைத்து தேவர்களுக்கும் பொதுவாக ஆதிரை நட்சத்திரமும் வைஷ்ணவ மூர்த்தங்களுக்கு திருவோணமும் சிறந்தது என்றும் அறிந்து வழிபடவேண்டும். நட்சத்திரங்களுக்குரிய தெய்வத்தை அந்தந்த நாளில் சிறப்பாக வழிபடுவதால் திருவருளை விரைவில் பெற இயலும்.