பதிவு செய்த நாள்
11
மார்
2017
12:03
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், தீர்த்தவாரி உற்சவம் துவங்கியது. திண்டிவனம் அடுத்த தீவனுாரில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ௭ம் ஆண்டு மாசி மாத தீர்த்தவாரி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, காலையில் லட்சுமி நாராயண பெருமாளுக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேககங்கள் நடந்தது. பின், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாரதனை நடந்தது. இதன் தொடர்ச்சியாக காலை ௯:௦௦ மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள்ஊர்வலமாக புறப்பட்டு, திண்டிவனம், கிளியனுார், இரும்பை, மொரட்டாண்டி வழியாக பட்டானுார் ஜகன்நாத் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு, நேற்று காலையில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு மஞ்சனமும், மகா தீபாரதனையும் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக நாளை (௧௨ம் தேதி) வைத்திக்குப்பம் கடற்கரையில் நடக்கவுள்ள தீர்த்தவாரியில் அருள்பாலிக்கிறார். தீர்த்தவாரியை முடிந்து, ௧௪ம் தேதி உற்சவ மூர்த்திகளுக்கு, புதுச்சேரி தியாகராஜ வீதியில் உள்ள சரஸ்வதி விலாச சபாவில் தீபாரதனையும், நாராயணபெருமாளுக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. அதை தொடர்ந்து, ௧௫ம் தேதி மிஷன் வீதி, வைசியால் வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக சென்று, பிள்ளைத்தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் கோவிலில் எழுந்தருள்கிறார். பின், ௧௬ம் தேதி மதியம் ௨:௩௦ மணிக்கு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு, விசேஷ தீபாரதனையுடன் வழியனுப்பி வைக்கப்படுகிறது. வரும் ௧௭ம் தேதி வானுார், மயிலம், திண்டிவனம் வழியாக கோவிலை வந்தடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா முனுசாமி செய்துள்ளார்.