பதிவு செய்த நாள்
15
மார்
2017
11:03
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி பிரம்மோற்சவம், பந்தம் பறி உற்சவம் மற்றும் 18 திருநடனத்துடன் நிறைவு பெற்றது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு, தினசரி, 1,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்வர். இங்கு, மாசி பிரம்மோற்சவம், கடந்த, 3-ல் , கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் நிகழ்வில் சூரியபிரபை, சந்திரபிரபை, பூதம், சிம்மம், நாகம், அதிகார நந்தி, புஷ்ப பல்லக்கு, அஸ்தமானகிரி விமானம், யானை, குதிரை, இந்திர வாகனங்களில், உற்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார்.
தினமும், தியாகராஜர் மாடவீதி உற்சவம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 9ம் தேதியும்; திருக்கல்யாணம், 11ம் தேதியும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் கடைசி நிகழ்வான பந்தம் பறி உற்சவம் மற்றும் 18திருநடனம், நேற்று நடை பெற்றது. இதில், சங்கநாதம் முழங்க, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், வடிவுடையம்மனுடன் தியாகராஜர், அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்தருளினர்; பின், 16 கால் மண்டபத்தின் வழியாக மாடவீதிகளில் வலம் வந்தனர். பந்தம் பறி உற்சவத்தை தொடர்ந்து, கோவில் வளாகத்தினுள் கொண்டு வரப்பட்ட தியாகராஜர், வலமிருந்து இடமாக, ஒன்பது முறை திருநடனம் புரிகையில், எதிர் திசையில் வடிவுடையம்மன் வந்து செல்வார். அதையடுத்து, வடிவுடையம்மன் தெற்கு நோக்கியும்; தியாகராஜர், வடக்கு நோக்கி வடிவுடையம்மன் அருகே சென்று வருவது போன்றும், ஒன்பது திருநடனம் நடைபெற்றது. இந்த, 18 திருநடனத்தின் போது, பலவகையான மலர்கள் துாவப்பட்டன. இதை காண, நேற்று முன்தினம் இரவே, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் வளாகத்தில் தங்கியிருந்தனர்.மேலும் அதிகாலையில் வந்த பக்தர்களும், இதில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுடன், தியாகராஜசுவாமி பிரம்மோற்சவம், இனிதே நிறைவு பெற்றது.
காவல் துறை எங்கே?: பிரம்மோற்சவத்தின் இறுதியில் நடக்கும் திருநடனத்தை காண, அதிகளவில் பக்தர்கள் வருவர்.கடந்த முறை , போலீசாரால், பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இந்த முறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யாததால், திருநடன நிகழ்வு சற்று சிரமமாகவே இருந்தது.