பதிவு செய்த நாள்
06
ஏப்
2017
02:04
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, பழமையான மரகதலிங்கம் விற்க முயன்றதாக, இருவரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர், கலியமூர்த்தி, 58; தன் வீட்டில், பல ஆண்டுகளாக, 6 அங்குல உயரம், 5 அங்குல அகலத்தில் மரகலிங்கத்தை வைத்து பூஜை செய்து வந்தார்.
இந்நிலையில், இந்த மரகதலிங்கத்தை விற்க, பந்தநல்லூரைச் சேர்ந்த விஜயராகவன், 37, என்பவருடன், நேற்று முன்தினம், கோவிந்தபுரம் அருகே வந்துள்ளார். இது குறித்து, தகவல் கிடைத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், திருவிடைமருதூர் போலீசாரும் இணைந்து, கலியமூர்த்தியை சோதனை செய்தனர். அவர்களிடமிருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறுகையில்,கலியமூர்த்தி வீட்டில் வைத்து, மரகதலிங்கத்தை பூஜை செய்தாலும், அதை முறைப்படி அரசிடம் பதிவு செய்திருக்க வேண்டும். அவரிடம் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், மரகதலிங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மரகதலிங்கத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதாக, விசாரணையில் தெரிய வந்தது, என்றார்.