சிதைந்த தேனூர் மண்டபம் ரூ. 40 லட்சத்தில் புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2017 11:04
புதுார், மதுரை வைகை ஆற்றில் உள்ள தேனுார் மண்டபத்தை அழகர்கோவில் நிர்வாகம் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். துர்வாச முனிவரால் மண்டூகமாக சாபம் பெற்று, வைகை ஆற்றில் இருக்கும் சுபதஸ் முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவதற்காக கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு வருகிறார் சுந்தரராஜ பெருமாள். வண்டியூர் சென்று திரும்பும் போது, வைகை ஆற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூகமாக உள்ள சுபதஸ் முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.
வண்டியூர் செல்லும் வழியில் உள்ள இம்மண்டபம் திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. மண்டபத்தின் அடிப்பகுதி அரிக்கப்பட்டு பாறாங்கற்களால் அமைக்கப்பட்ட படிகள் சேதமாகின. இதனால் மண்டபம் இடியும் அபாயத்தில் இருந்தது. மண்டபத்திற்கும், தரைப்பகுதிக்கும் இடைப்பட்ட துாரம் அதிகமானதால் மண்டபத்திற்கு வாகனத்துடன் சுவாமியை கொண்டு செல்வதில் சீர்பாதங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. 2014ல் சுவாமியை மண்டபத்திற்கு துாக்கிச் செல்லும்போது ஏற முடியாமல் கீழே தவற விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தக்கார் வெங்கடாஜலம் தேனுார் மண்டபத்தை புதுப்பிக்க கோயில் நிர்வாகத்திற்கு பரிந்துரைத்தார். இதற்காக கோயில் சார்பில் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொல்லியல் துறை ஆலோசனைப்படி பழமை மாறாமல் மண்டபம் புதுப்பிக்கும் பணி துவங்கியது. மண்டபத்தில் இருந்த பட்டிய கற்களை புதுப்பித்து 16 அடி உயரத்தில், 22 படிகளுடன் 6 படிகளுக்கு ஒருமுறை சுவாமி வைப்பதற்கு வசதியாக இடம் விடப்பட்டுள்ளது. வெள்ளை நிற வண்ணத்தில் மண்டபம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சிம்மக்கல் பாலம் அருகில் உள்ள மண்டபத்தையும் புதுப்பிக்க மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.