பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
02:04
சின்னாளபட்டி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. விஸ்வரூப தரிசனத்தை தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகனுக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில், பங்குனி உத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா நடந்தது. சுவாமிக்கு கொடுமுடி, சுருளி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டன. பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப காவடிகள் எடுத்து வந்தனர். மகா அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பாலமுருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர், பண்ணைக்காடு, ஆடலுார், காமனுார், மங்களம்கொம்பு, பெரும்பாறை, பூலத்துார், கும்பறையூர், கானல்காடு பகுதியினர் கலந்து கொண்டனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குறிஞ்சியாண்டவருக்கு காவடி விழா நடந்தது. குறத்தி சோலையில் பக்தர்களால் தீர்த்தம் எடுத்தனர். பின்பு ஊர்வலம் சித்தி விநாயகர் கோயிலிலிருந்து புறப்பட்டு அட்டுவம்பட்டி, அப்சர்வேட்டரி, ஆனந்தகிரி, பாம்பார்புரம் உட்பட பல பகுதிகளிலிருந்து அனைத்து காவடிகளும் கலையரங்கில் ஒன்று சேர்ந்தன. காவடிகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று குறிஞ்சியாண்டவர் கோயிலை அடைந்தது. அன்னதானமும், மாலை 4 மணியளவில் குறிஞ்சியாண்டவருக்கு 18 வித சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குனி உத்திர காவடி கமிட்டி, கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர்.