பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
03:04
வால்பாறை: சுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திரத்திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலின், 65ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பகல், 12:00 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடந்தது.
மாலை, 3:00 மணிக்கு முருகன் நற்பணி மன்றத்தலைவர் மதனகோபால் தலைமையில் திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. விழாவில் இன்று காலை, 8:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து, கோவிலுக்கு பக்தர்கள் சுத்துக்காவடி, அங்கு அலகு காவடி மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு முருகன் தேவியருடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.