பதிவு செய்த நாள்
04
நவ
2011
02:11
தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.
பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.