பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
மதுரை: மனதில் விதைக்கப்படும் நல்ல உபதேசங்கள் தான் மனிதனை மாற்றும். இறைவனை நாட வைக்கும், என வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். சத்குரு சங்கீத சமாஜம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த உபன்யாசத்தில், ஆசார்ய தேவோ பவ தலைப்பில் அவர் பேசியதாவது: தாய், தந்தை, ஆச்சாரியன், விருந்தினர்களைத் தான் தெய்வமாக கொள்ள வேண்டும். பெற்றவர்களை தெய்வ மாக மனது ஏற்றுக் கொள்ளும். தேசிகன், குரு, ஆச்சாரியன் இவர்கள் பெற்றோரை விட ஞானப்பிறவியை கொடுப்பவர்கள்.குருவானவர் உள்இருட்டை போக்க உபதேசம் செய்து, பரமாத்மாவை சொல்லிக் கொடுப்பவர். தேசிகன் நல்வழி காட்டி, வைகுண்ட பாதையை அடைய வழிகாட்டுபவர். ஆன்மிக பயணம், தொண்டுகள் செய்தல், இறைவனை தியானித்தல் மூலம் இப்பாதையை அடையலாம்.ஆச்சாரியன் இதிகாசம் கற்று அதன்படி நடப்பவன். தன்னை நம்பியவர்களை வழிநடத்துபவன். அவன் வழியில் நடந்தால் இறைவனை அடைந்து முக்தியடையலாம். தெய்வத்தை பூஜிப்பது போல் ஆச்சாரியர்களையும் பூஜிக்க வேண்டும். விருந்தினர்களாலும் இறைவனை அடைய முடியும், என்றார்.சத்குரு சங்கீத சமாஜ கவுரவ செயலர்கள் ராஜாராம், வெங்கட்டநாராயணன், பிராமணர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலர் ரவி, விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் உரிமையாளர் சங்கரசீத்தாராமன் மற்றும் பலர் வரவேற்றனர். இன்றும், நாளையும் உபன்யாசம் நடக்கிறது.