பொதுவாக ஆலயங்களில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது வழக்கமான ஒன்றுதான்! ஆனால் இங்கு பழங்களைக் குறைந்த அளவில் படைக்காமல், கூடைகூடையாக, கொத்துக் கொத்தாக, குலைகுலையாகப் படைத்து வழிடுகின்றனர். காய் கனிகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்து அதையே ஊர்மக்களுக்கு பிரசாதமாக வழங்குமளவிற்கு இறைவனுக்குப் படைத்து வழிபாடு செய்கின்றனர். திருநெல்வேலி -தூத்துக்குடி சாலையில் உள்ளது விட்டலாபுரம் பாமா-ருக்மணி சமேத பாண்டுரங்கன் கோயில். இந்தக் கோயிலில் திரட்டுப்பால் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிராத்தித்தால்,சந்தான பாக்கியம் கைக்கூடும்; கல்யாண வரம் கிடைக்கும்; சகல ஜஸ்வரியங்களும் பெற்று இனிதே வாழலாம் என பக்தர்கள் கூறுகின்றனர். நெல்லை சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள காருகுறிச்சியில் அமைந்துள்ளது குளத்தூர் அய்யன் சாஸ்தா கோயில். இங்கு, படிப்பாயச நைவேத்தியம் பிரபலம். கோயிலுக்கு அருகில் உள்ள குளக்கரையின் படிகளைச் சுத்தம் செய்து, அதில் இறைவனுக்குப் படையலிட்ட உணவை இட்டுச் சாப்பிடுகின்றனர் பக்தர்கள். இறைவனைப் பிரார்த்தித்து, படிப்பாயச வழிபாடு செய்தால், வாழ்க்கை இனிக்கும் என்பது நம்பிக்கை!