பழநி : பழநி கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், என புதிதாக பொறுப்பேற்ற கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார். திருச்செந்தூரில் பணிபுரிந்த இவர், பழநி கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றார்.இங்கு பணிபுரிந்த ராஜா, திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இணை ஆணையர் பாஸ்கரன் கூறியதாவது: கூட்ட நெரிசலிலும் பக்தர் சவுகரியமாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவும், பழநி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சண்முக நதியை புனித நதியாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.