பதிவு செய்த நாள்
10
மே
2017
11:05
உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழாவில், திருநங்கைகளுக்கு பூசாரி தாலி கட்டும் வைபவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் சுவாமிக்கு திருக்கண் திறக்கப்பட்டது. நேற்று மாலை 3.30 மணிக்கு, திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். மாலை துவங்கிய தாலி கட்டும் நிகழ்ச்சி, இரவு வரை நீடித்தது. மும்பை, சென்னை, டில்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள், பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொண்டு, இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடினர். சுகாதாரத் துறை சார்பில், திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.