பதிவு செய்த நாள்
11
மே
2017
03:05
கீழக்கரை, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. இங்கு பட்டாபிஷேக ராமர், சீதாபிராட்டியார், லெட்சுமணன், பரதன், சத்ருக்கனன், அனுமன் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. சைத்ரோஸவம் எனும் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மே. 2 அன்று தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகளும் மே 7 அன்று திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணியளவில் பட்டாபிஷேக ராமர், சீதாபிராட்டியார், லெட்சுமணன், அனுமன் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், சாற்றுமுறை, கோஷ்டி பாராயணம் செய்யப்பட்டு, 50 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் நான்குரதவீதிகளிலும் வலம் வந்தனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா கோஷம் முழங்க வடத்தினை பிடித்து இழுத்து வந்தனர். தேர் நிலைக்கு வந்ததும், தீர்த்தம் தெளிக்கப்பட்டு, கூட்டத்தில் மா, வாழை பழக்கனிகள் வீசப்பட்டு, பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4 :00மணியளவில் பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடந்தது. கொடியிறக்கத்திற்கு பின், இரவில் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.