பதிவு செய்த நாள்
11
நவ
2011
12:11
சேலம்: சேலத்தில், ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும், இறைவனுக்கு அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டுச் சென்றனர். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில், சிவன் கோவில்களில் இறைவனுக்கு அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அலங்காரம் நடந்தது. சேலம் காசி விஸ்வநாதர் கோவில், கரபுரநாதர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், அம்பலவானர் ஸ்வாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு அன்ன சாத்துபடி செய்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டு தரிசனம் செய்து, இறைவன் அருள் பெற்றனர். அன்னாபிஷேகம் முடிந்தவுடன், கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு சாகம்பரி அலங்காரம் செய்து, மஹா தீபாரதனை வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.