பதிவு செய்த நாள்
22
மே
2017
01:05
சமர்த்த ராமதாசரின் பிரதம சீடராக விளங்கியவர் சத்திரபதி சிவாஜி, அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பக்தியும் கொண்டவர். ஒருசமயம் பாளிகட் என்னும் ஊரில் சமர்த்த ராமதாசரும், ஹரிபக்தரான துக்காராம் சுவாமிகளும் அபூர்வமாக சந்தித்தனர். இருவரும் இன்புற்று பேசி, மகிழ்ந்து, உணர்ச்சி மிகுதியால் ராமநாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். அப்போது அங்கே வந்த சத்திரபதி சிவாஜி, இரண்டு குருமார்களையும் ஒருங்கே கண்டு மிகுந்த ஆனந்தம் அடைந்தார். சந்தோஷ மிகுதியால் தான் ஒரு மகாராஜா என்பதையும் மறந்து, காலில் சதங்கைகளை கட்டிக் கொண்டு, கையிலே சப்ளாக் கட்டை ஏந்தி, பாடி ஆடி அவர்களோடு சேர்ந்து தாமும் பஜனை செய்யலானார். பாராளும் வேந்தனும் பரம சன்னியாசிகளும் ஒன்றாகச் சேர்ந்து ஆடிப்பாடி நாமம் சங்கீர்த்தனம் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். அந்த பாளிகட் திருத்தலம் சாதுக்களாலும், நல்லோராலும் நிறைந்து, எப்பொழுதும் இறைவனது புகழையே பரப்பி வந்தது. நாளடைவில் அந்த இடம் சஜ்ஜனகட் என்னும் பெயர் பெற்று விளங்கியது. இங்குள்ள மலையில் இருந்த பராசக்தி, சமர்த்த ராமதாசரது கனவிலே தோன்றி, தன்னையும் பாடும்படி பணிக்க, தேவியின் மீதும் பல பாடல்கள் பாடினார் தாசர்.