பதிவு செய்த நாள்
23
மே
2017
03:05
ஒவ்வொரு நட்சத்திர நாளிலும் செய்யவேண்டிய தானங்கள் குறித்தும், அதனால் கிட்டும் பயன்களைப் பற்றியும் பாகவதத்தில் நாரத மகரிஷி தேவகிக்கு உபதேசித்துள்ளார். இவ்வாறு தேவகியிடமிருந்து வழிவழியாக அறியக்கிடைத்த, 28 நட்சத்திர தான வகைகளின் பயன்களை இங்கு காண்போம்.
1. கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாளில், நெய் பாயசத்துடன், பிராம்மண போஜனம், அன்னதானம் செய்விப்பவர் உத்தமமான தேவருலகை அடைவர்.
2. ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளில், பால், தயிர், நெய்யுடன் கறிகாய்கள் மற்றும் பழவகைகளை தானம் செய்வதால் கடனிலிருந்து விடுபடுவர்.
3. மிருகசீரிட நட்சத்திரம் கூடிய நாளில், கன்றுடன் கூடியுள்ளதும், பால் தருவதுமான கோ தானத்தால் சொர்க்க லோகம் கிட்டும்.
4. திருவாதிரை (ஆதிரை) நட்சத்திரம் கூடிய நாளில், எள் கலந்த வெல்ல தானத்தாலும் (க்ருசரம்), அன்னதானத்தாலும் நமது பெரும் சங்கடம், ஆபத்து நீங்கும்.
5. பூனர்பூச நட்சத்திரம் கூடிய நாளில் செய்யப்படும் அன்னதானத்தால், உத்தம குலப்பிறப்பு, அழியாப்புகழ், அன்னச் செழிப்பு, தோற்றப் பொலிவழகு ஆகியவற்றைப் பெறுவர்.
6. பூச நட்சத்திரம் கூடிய நாளில் தங்கத்தாலான ஆபரணம் அல்லது தங்கக் கட்டி தானம் செய்தால், காணாத அரிய உலகங்களையும் கண்டு, தானம் செய்தோர் மகிழ்ந்து வாழ்வார்.
7. ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில், வெள்ளி அல்லது வண்டி மாடு, எருது தானத்தால், அனைத்துப் பயங்களிலிருந்து விடுதலையும், உத்தமகுலப் பிறப்பும் ஏற்படும்.
8. மக நட்சத்திரம் கூடிய நாளில், பெரியளவு புதிய பாத்திரத்தில் எள்ளை வைத்து, அதிகளவில் எள் (திலம்) தானம் செய்பவர், புத்ரவானாயும் பசுமானாகவும் இருந்து, முடிவில் பரலோகத்தில் பேரானந்தத்தைப் பெறுவர்.
9. பூர நட்சத்திரம் கூடிய நாளில் சிறப்பு பட்சண வகைகளுடன் விருந்துணவை வேதியருக்கு அளிப்பவர் சகல சவுபாக்கியத்தையும் பெறுவர்.
10. உத்திர நட்சத்திரம் கூடிய நாளில் நெய், பால் இவற்றுடன் கூடிய உயர்தர சம்பா அரிசி அன்னத்தால் தானம் செய்வோருக்கு சொர்க்கம் கிட்டும். எப்பொழுது இந்நாளில் செய்யப்படும் தானங்கள் பலமடங்கு உயர்ந்த பலனைத் தருவனாகும்.
11. ஹஸ்த நட்சத்திரம் கூடிய நாளில், கொடி பதாகை, பாதச்சலங்கையுடன் கூடியுள்ளதும், நான்கு குதிரைகளுடன் கூடியதுமான முழுத்தேரை தானம் செய்வோர் புண்ணியலோகத்தை அடைந்து மகிழ்ந்து வாழ்வர்.
12. சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் காளை மாடு, மாட்டு வண்டி அல்லது சந்தனகட்டை தானம் செய்பவர் அப்சர லோகத்தில் அப்சரஸ் பெண்கள் (தேவலோக நடனமாதர்களின்) உபசரிப்பில் மகிழ்ந்து வாழ்வர்.
13. ஸ்வாதி நட்சத்திரம் கூடிய நாளில், தனக்கு மிகவும் விருப்பமான பொருளை தானம் செய்பவர் இங்கு அழியாப் புகழையும், சுபலோகத்தில் மகிழ்ச்சியையும் பெற்று வாழ்வர்.
14. விசாக நட்சத்திரம் கூடிய நாளில், வண்டி மாடு அல்லது கரவைப் பசு, தானியம் அல்லது துணிகள் வைத்துள்ள மாட்டு வண்டி, துணிகள் வைத்துள்ள மாட்டு வண்டி ஆகியவற்றை தானம் செய்பவர் பித்ருக்களை மகிழ்வித்தவராகி, துயரத்திலிருந்து விடுபட்டவராகி, சொர்க்கம் முதலியவற்றிலும் எல்லையற்ற சுகபோகப் பயனைப் பெறுவர்.
15. அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில் வஸ்திரதானம் (உயர்தர ஆடை) செய்பவர் சொர்க்கத்தில் நூறாண்டு காலம் கொண்டாடப்படுவர்.
16. கோட்டை நட்சத்திரம் கூடிய நாளில், அக்காலத்தின் சிறந்த காய்கறிகளையும், வேர்க்கிழங்குகளையும் தானம் செய்பவர், தனது விருப்பம் நிறைவேறியவராய், இவ்வுலகில் மகிழ்ந்து வாழ்பவராய், முடிவில் நற்கதியும் பெறுவர்.
17. மூல நட்சத்திரம் கூடிய நாளில், வேர்க்கிழங்கு வகை, பழவகைகளை தானம் செய்வதால், பித்ருக்களை மகிழ்வித்தவராகி, விரும்பும் நற்கதியையும் பெறுவர்.
18. பூராட நட்சத்திரம் கூடிய நாளில் வேதியருக்கு தயிர் நிறைந்த பாத்திரத்தின் தானத்தால், தனம், தானியம், பசு இவற்றின் நிறையையும், பின்பு நற்குலத்தில் பிறப்பையும் எய்துவர்.
19. உத்திராட நட்சத்திரம் கூடிய நாளில், நீர்நிறைந்த குடத்துடன், சத்து மாவு, தின்பண்டங்கள், உயர்தர உணவு ஆகிய தானத்தால் அனைத்து வகையான விரும்பும் பயனை விரைவில் அடைவார்கள்.
20. அபிஜித் நட்சத்திரம் கூடிய நாளில் அறநெறியில் நின்று, தேன், நெய் இவற்றுடன் பசும்பாலை தானம் செய்வதால் சொர்க்கலோகத்தில் மகிழ்வர்.
21. திருவோண நட்சத்திரம் கூடிய நாளில், வேட்டி துணியுடன் கம்பளத்தை தானம் செய்தால், வெள்ளி விமானத்தின்மூலம் சொர்க்கம் செல்லும் பேறு பெறுவர்.
22. அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில், பசுவுடன் கூடிய காளை, வஸ்திரம் (துணி), தனம் (பொற்காசு) தானம் செய்பவர் மறுமையில் மோட்ச சாம்ராஜ்யத்தைப் பெறுவர்.
23. சதய நட்சத்திரம் கூடிய நாளில், அகரு சந்தனத்துடன் நல்ல வாசனைப் பொருட்களை தானம் செய்தால் மேலுலகில், அப்சரஸ் பெண்களுடன் உல்லாச சுகபோகத்தை அடைவார்கள்.
24. பூரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில் (ராஜமாஷம்) மொச்சை தானியம், பலகார வகைகள், பழவகைகள் தானத்தால், பரலோகத்தில் திவ்ய உணவு வகைகளுடன் சுகபோக வாழ்வைப் பெறுவர்.
25. உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய நாளில், ஔரப்பழ தானம், ஏழை எளியோருக்கு மாமிச தானம் செய்தால் இறந்த பித்ருதேவதைகளை மகிழ்த்துவித்தவராகி, அவர் சுபயோகமும் பெற்று, மேலுலகில் சுகவாசியாகவும் திகழ்வார்.
26. ரேவதி நட்சத்திரம் கூடிய நாளில், வெண்கலப்பாத்திரத்தில் அதிக பசும்பாலையும், கரவைப் பசுவையும் சேர்த்து தானம் செய்தால், அப்பசுவானது அவருக்கு மேலுலகில் சகலவிதமான குறைவற்ற சுகத்தையும் சேமித்து அளித்திடும் .மேலும் அவர் எங்கும் மகிழ்ந்திருப்பார்.
27. அஸ்வினி நட்சத்திரம் கூடிய நாளில், குதிரையுடன் கூடிய தேரை தானம் செய்வதால், தானம் செய்பவர் தேர், யானை, குதிரை, பணியாளர்களுடன் கூடிய சகலசெல்வங்களையும், சத்புத்திரனையும் பெற்று வாழ்வார்.
28. பரணி நட்சத்திரம் கூடிய நாளில், எள்ளால் செய்யப்படட பசு பிரதிமையை (எள் நிறைந்த உலோகப்பசு) வேதியருக்கு தானம் செய்வதால், இவ்வுலகில் அதிக பசுக்களையும் இந்த திலதேனு தானத்தால் மேலுலகில் பெரும் புகழையும் அடைவார்கள் என்றும் நாரதர் கூறியுள்ளார்.
இவ்வுலகில் மரங்கள் கனிகளையும், நதிகள் நீர் வளத்தையும், பூமி தனதானியங்களையும் பிறருக்கு வழங்கி மகிழ்விப்பதைப்போல, அறநெறிப் பெரியோர்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்களின் சொத்தில் மூன்றில் இருபங்கு செல்வத்தை, தானதருமங்களுக்குத் தந்து புண்ணியத்தின் நற்பயனைப் பெற வேண்டும் என்று நமது தர்மசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.