பதிவு செய்த நாள்
26
மே
2017
11:05
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவில், தேரோட்டம், திரளான பக்தர்கள் முன்னிலையில், நேற்று துவங்கியது. சுயம்புவாய் தோன்றி, சூலத்துடன் காட்சி அளிக்கும் சூலக்கல் மாரியம்மனுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விழா எடுக்கப்பட்டு, கோவிலை சுற்றி, முக்கிய வீதிகள் வழியாக, அம்மனின் மூன்று நாள் தேர் பவனியும் நடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் அம்மனை வேண்டி, 18 கிராமத்தினர் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலமும், தொடர்ந்து பொங்கலிடுதலும் நடந்தது. நேற்று காலை, அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்வும், தொடர்ந்து, மாலை, 4.15 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் பக்தியுடன் நடந்தது. கிராம மக்கள் முன்னிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், செயல்அலுவலர் ஜெயசெல்வம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் தேர்வடம் பிடித்து இழுத்தனர். இரண்டாவது நாளாக இன்றும், மூன்றாவது நாளாக நாளையும் தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நாளை திருத்தேர் நிலைக்கு வந்ததும் கம்பம் கலைத்தல் மற்றும் மஞ்சள் நீராடல் நடக்கிறது.