பதிவு செய்த நாள்
12
நவ
2011
10:11
திருவண்ணாமலை: ""திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்க உள்ள கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்பு பணிக்கு, 10 ஆயிரம் போலீஸார் உள்ளிட்ட, 15 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என, வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு கூறினார். திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, டிசம்பர் 8ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மஹாதீபமும் ஏற்றப்படும். இதனை காண, பல்வேறு பகுதியிலிருந்து, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், செய்து வருகின்றன. இதில், பாதுகாப்பு பணிகள் குறித்தும், போக்குவரத்தை சீரமைப்பது குறித்தும், காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, திருவண்ணாமலையை இணைக்கும் ஒன்பது கூட்டு சாலைகளில் அமைக்கப்பட உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கோவிலில் பாதுகாப்பு அமைப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
இது குறித்து காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு, நிருபர்களிடம் கூறியதாவது: வரும் டிசம்பர் 8ம் தேதி தீப திரு விழா நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவில் உள்ளே, 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதேபோன்று, கோவிலை சுற்றி வெளிப்பகுதியிலும், 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்காக பல்வேறு பகுதிகளில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவிற்கு, 20 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர், ஆண்டு தோறும், 10 சதவீதம் பக்தர்கள் கூடுதலாக வருகை தருவதால், இந்த ஆண்டு, 22 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக பாதுகாப்பு பணியில், 10 ஆயிரம் போலீஸார், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., தன்னார்வ தொண்டர்கள், 5,000 பேர் என மொத்தம், 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மலை மீது ஏறும் பக்தர்களுக்கு, ஆங்காங்கே கூட்ட நெரிசல் ஏற்படாமல் சரிசெய்து, அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு, நூறு கமாண்டோ போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு தகவல் உதவி மையங்கள், 33 அமைக்கப்பட உள்ளது. திருவிழா கூட்டத்தில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு பகுதிகளிலிருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு, அந்த குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.