சபரிமலை சீசன் காலத்தில் எல்லை மாவட்டங்களில் சுகாதார பரிசோதனை முகாம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2011 10:11
நாகர்கோவில்: சபரிமலை சீசன் தொடங்கும் காலத்தில் தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன் கூறினார். எல்லையோர மாவட்டங்களில் பரவும் தொற்று நோயை தடுப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கன்னியாகுமரியில் ஆலோசனை நடத்தினர்.டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற பல நோய்கள் ஒரு மாநிலத்தில் ஏற்படும் போது அது அண்டை மாநிலத்துக்கும் வேகமாக பரவுகிறது. இதனால் எல்லையோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
இதை தடுப்பதற்காக மருத்துவ ரீதியாக இரண்டு மாநிலங்களுக்கிடையே கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலஎல்லையில் அமைந்துள்ளதால் இதுபோன்ற தொற்று வியாதிகளை தடுப்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன், கேரள அரசின் பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்கள் டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் ஜேக்கோ டீசன், கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் மற்றும் இரு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பூச்சிகளால் பரவும் நோய்களை கண்டறிவது, இதை தடுப்பதற்கு தேøவான நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது, இது தொடர்பான தகவல்களைவிரைவாக பரிமாறி கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் பொற்கை பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு 2060 பேர் கேரளாவில் இருந்து தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்தனர். இந்த ஆண்டு 1664 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பருவமழை சீசன் நீடிக்கும் என்பதால் சபரிமலை சீசன் காலத்தில் கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.