பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
12:06
சேலம்: நந்தவன அலங்காரத்தில், வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார். சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி, எட்டாம் ஆண்டு வசந்த உற்சவம், மே, 31ல் அங்குரார்பணத்துடன் தொடங்கியது. கடந்த, 1 காலை, நவகலச திருமஞ்சனம் நடந்தது. நேற்று, காய்கனிகளால் பந்தல் அமைத்து, பல வண்ண மலர்கள், செடி, கொடிகளால், நந்தவனம் போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சர்வ அலங்காரத்தில் வரதராஜரை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு ஏகாதசி உற்சவம், சூர்ணாபிஷேகம், மாலை திருவாராதனை சாற்றுமுறை, நாளை, லட்சுமி நரசிம்மர் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். வரும், 7 காலை, 9:00 மணிக்கு, வைகாசி விசாக கருடசேவை, 9 காலை, 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம், 12:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 10 மாலை, 6:00 மணிக்கு, பெருமாள் உபயநாச்சியார்கள் ஊஞ்சல் சேவையுடன், வசந்த உற்சவம் நிறைவடையும்.