பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
11:06
அவிநாசி : அவிநாசியை அடுத்த சுண்டக்காம்பாளையம், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சென்னியாண்டவர், பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இத்தலத்தில், வேல் வடிவில் பரமசிவன் எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ பரமசிவன், ஸ்ரீ சென்னியாண்டவர் சுவாமிகளுக்கு, மூன்று கோபுரங்களுடன் கூடிய கோவிலும், பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், தன்னாசி அய்யன் மற்றும் நவக்கிரகங்களுக்கு புதிய கோவில்கள் என, திருப்பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 5ல் துவங்கியது. அன்று காலை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. கடந்த, 6ல், முளைப்பாளிகை ஊர்வலம் மற்றும் யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, நிறைவேள்வி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் நடந்தது.