பதிவு செய்த நாள்
17
ஜூன்
2017
12:06
திருப்பூர்: ஊத்துக்குளி அருகே, கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம், ஜூலை, 5ல் நடைபெறவுள்ளது. ஊத்துக்குளியில், பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. கதித்தமலைக்கு வந்த அகத்திய முனிவர், தாகத்தால் தவித்த நிலையில், வேலாயுத சுவாமி தனது சக்தி வேலை ஊன்ற, அதில் இருந்து தண்ணீர் வந்தது. இதனால், ஊற்றுக்குழி என்று பெயர் பெற்றது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலத்தில், மலை மீது தேரோடும் கோவில் என, பல்வேறு சிறப்பு பெற்றது. இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, வரும், 28ம் தேதி, கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
வரும், 29ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடக்கிறது. 30ல், நவகோள் வேள்வி, பிரவேசபலி, ரஷோக்சன ஹோமம் நடக்கிறது. ஜூலை, 1ல், சாந்தி ஹோமம், திசா ஹோமம் நடக்கிறது. 2ம் தேதி காலை, பஞ்ச வாத்ய கோஷங்களுடன், சிவன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் கலச தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடக்கிறது. மாலை, 4:30க்கு, கட ஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், யாத்ர ஹோமம், முதற்கால யாக பூஜை நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை; மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடைபெறவுள்ளது. வரும், 4ம் தேதி, நான்காம்கால யாக பூஜை, கோபுர கலச ஸ்தாபனம், பரிவார சுவாமிகளுக்கு யந்திரம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00க்கு, ஐந்தாம் கால யாக பூஜை, கலச பூஜை, மூலமந்திர யந்திர, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 5:30 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை; 8:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு; காலை, 9:30 மணிக்கு விநாயகர், மூலவர், வள்ளி தேவசேனா மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு, வெற்றி வேலாயுதசுவாமி மூலாலய மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சர்வ தரிசனம், அன்னதானம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, மகா அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடைபெறும்.