பழநி: பழநி முருகன் கோயில் இரண்டாம் ’வின்ச்’ பராமரிப்பு பணியில் பக்தர்கள் வசதிக்காக பெட்டிகள் விஸ்தரிக்கப்பட்டு முற்றிலும் புதுப்பிக்கப்படுகிறது. பழநி முருகன் மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் செல்லும் வகையில் நாள்தோறும் மூன்று ’வின்ச்’கள் இயக்கப்படுகின்றன. இதில் இரண்டாம் ’வின்ச்’ பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 12 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் 280 மீட்டர் துாரமுள்ள தண்டவாளப் பாதையில் இருந்து மரக்கட்டைகள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக உறுதியான சிமென்ட் சிலிப்பர்கள் பொருத்தப்படுகின்றன. பக்தர்கள் வசதிக்காக வின்ச் பெட்டிகள் இருக்கைகள் விஸ்தரிக்கப்பட உள்ளன. ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவை முற்றிலும் புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக பெட்டிகளை ’கிரேன்’ மூலம் லாரியில் ஏற்றி கரூருக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல தேய்மான உதிரிபாகங்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் ஓரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு, பாதுகாப்பான பயணம் உறுதி செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.