பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
11:07
ஆர்.கே.பேட்டை : ஆவணி சதுர்த்தி திதியில் கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில், தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சிலை தயாரிப்பு தொழிலாளர்கள், ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் தங்கியிருந்து, விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஆண்டுக்கு ஆண்டு, விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். புதிய குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அந்த பகுதிகளிலும் புதிதாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, விநாயகர் சிலைகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. தேவை அதிகரித்ததை அடுத்து, சிலை தயாரிப்பாளர்கள், ஆர்.கே.பேட்டை பகுதியில் தங்கியிருந்து சிலைகளை தயாரிக்க துவங்கி உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, சிலைகளை லாரிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்தது. தற்போது, இதே பகுதியில், தொழிற்கூடங்களை வாடகைக்கு எடுத்து, சிலைகளை தயாரிக்கின்றனர். மூன்று மாதங்களாக இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் சிலைகளை தயாரித்துள்ளனர். தற்போது, கிழங்கு மாவு கொண்டு தயாரிக்கப்பட்ட, வெண்ணிற சிலைகள், வெயிலில் காயவைக்கப்பட்டு வருகின்றன. மழை தீவிரம் அடையும் முன்பாக, சிலைகளை காயவைத்து, கிடங்கில் பாதுகாத்து வருகின்றனர். ஆடி முடிந்து, ஆவணி பிறந்ததும், சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி மேற்கொள்ளப்படும். பகுதிவாசிகள், வித்தியாசமான விநாயகர் சிலைகளுக்கு, இப்போதே ஆர்டர்களை குவித்து வருகின்றனர்.