பதிவு செய்த நாள்
18
நவ
2011
02:11
பந்தளம் மன்னர் காலத்தில் எருமேலி அடர்ந்த காடாக இருந்தது. வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக நடமாடின. அப்படிப்பட்ட இடத்தில்தான் சுவாமி ஐயப்பன் புலிப்பால் தேடி வந்தார். அடர்ந்த காடு. அந்தி மயங்கும் நேரம். இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. ஐயப்பன் அந்த பகுதியில் விளக்கு வெளிச்சம் தெரிந்த வீட்டுக்கு சென்றார். அங்கு ஒரு வயதான மூதாட்டி இருந்தார். தாயே! பசிக்கிறது, ஏதாவது கொடுங்கள், என்று ஐயப்பன் கேட்க, மூதாட்டிக்கு தர்ம சங்கடம். மகனே, வீட்டில் சோறு இல்லையே. எல்லாரும் சாப்பிட்டாகி விட்டது. சுவாமிக்கு சமர்ப்பித்த அவல், பழம் இருக்கிறது, அதைச் சாப்பிடுகிறாயா? எனக்கேட்டார். அது போதும், என்று ஐயப்பன் ஆசையுடன் வாங்கி சாப்பிட்டார். பின்னர் மூதாட்டியிடம், இன்று இரவு இங்கு தங்க அனுமதிக்க வேண்டும், என்று கேட்டார்.
பாட்டியோ பகவானிடம், அப்பா! இங்கு மகிஷி என்ற அரக்கியின் தொல்லை தாங்க முடியாது. அதிலும் ஆண்களை அவளுக்கு அறவே பிடிக்காது. உன்னை அவள் கொன்று விடுவாள். எனவே எங்காவது மறைந்து கொள், என்றாள். ஆனால், ஐயப்பன் விடாப்பிடியாக பேசி மூதாட்டியிடம் சம்மதம் பெற்று அந்த வீட்டில் தங்கினார். நள்ளிரவில் மூதாட்டிக்கு தெரியாமல் வெளியேறி காட்டுக்குள் சென்றார். மகிஷி எதிரே வந்தாள். அவளைஅவர் வதம் செய்தார். பின்னர் வீடு திரும்பிய ஐயப்பன், மகிஷியைக் கொன்ற வாளை மூதாட்டியிடம் கொடுத்து, மகிஷியை கொன்று விட்டேன், இனி அவளது தொந்தரவு இருக்காது, என்று கூறி மறைந்தார். அந்த வாளை ஐயப்பன் தங்கிய அறையில் வைத்து மூதாட்டி பூஜை செய்தார். பல தலைமுறையாக இந்த வீடு எரிமேலியில் தான் இருக்கிறது. அதன் வடிவத்தைக் கூட மாற்றவில்லை. தினமும் விளக்கு வைப்பதை தவிர வேறு எந்த பூஜையும் நடத்துவதில்லை, என்கிறார் மூதாட்டியின் வாரிசான கோபாலபிள்ளை. கரியாலும், சாணத்தாலும் மெழுகிய தரை, மரங்களால் அமைக்கப்பட்ட அறை என்று பழமை மாறாமல் இந்த வீடு காட்சி தருகிறது. தேவபிரஸ்னம் நடத்திய போது, இந்த வீட்டில் ஐயப்பன் தங்கியதற்கான அறிகுறிகள் தெரிந்ததாக கோபாலபிள்ளை கூறுகிறார். மண்டல, மகரவிளக்கு காலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த வீட்டுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.