பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
01:07
ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், தாலுகாவிலுள்ள ஒரு முக்கிய க்ஷேத்திரமாகும். இங்கு புகழ்பெற்ற பூவராஹஸ்வாமியையும், அம்புஜவல்லித் தாயாரையும் தரிசிக்க, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நமது பாரதப் புண்ணிய பூமியில் ஸ்வயம்வ்யக்த வைஷ்ணவ தலங்கள் எட்டு, அவை: ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, (நாங்கு னேரி), சாளக்ராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பதரிகாச்ரமம், இதில் முதல் நான்கும் தென்பாரதத்தில் அமைந்துள்ளன. அசுரன் ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்யும் நிமித்தமாக இங்கு பூவராஹர் அவதரித்ததாகப் புராணம் கூறுகிறது. ஹிரண்யாக்ஷனுடைய செல்வம், ஆயுள், புகழ் முதலியவற்றை வராஹர் போக்கியதால் ஸ்ரீமுஷ்ணம் எனப்பெயர் ஏற்பட்டது. மற்ற விஷ்ணு கோயில்களில் திருமஞ்சனம் நீராட்டு முதலியன எப்போதாவது ஒரு விசேஷ நாளில்தான் செய்யப்படும். ஆனால் ஸ்ரீமுஷ்ணத்தில் தினமும் மூலவருக்கு அபிஷேகம் உண்டு. பிரம்ம, ருத்ர, விஷ்ணு, மூன்று அம்சங்களும் இம்மூர்த்தியில் விசேஷித்திருப்பதால், இவ்வாறு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.