பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
11:07
ஆத்துார்:ஆத்துார் அருகே, கோயில் கட்டுமான பணியின் போது, பூமிக்கு அடியில், 5 அடி ஆழத்தில் இருந்த நிலவரை சுரங்கத்தில் இருந்து, 14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஒன்பது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பூதேவி, ஸ்ரீதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. 1917ல் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு பின், பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. சிவன் மற்றும் பெருமாள் கோவிலை புனரமைப்பு செய்வதில் பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெருமாள் கோவிலின் வடகிழக்கு திசையில், ஆஞ்சநேயர் சிலை அமைக்க பள்ளம் தோண்டினர். 5 அடி ஆழத்தில் பலகை கற்கள் வரிசையாகவும், சிறிய வழிப்பாதை இருந்ததை பார்த்தனர். அந்த பாதையில் இறங்கி பார்த்த போது 8 அடி அகலம் 8 அடி நீளத்தில், சதுர வடிவில் நிலவரை சுரங்கம் இருந்தது. அந்த சுரங்கத்தினுள் 3 அடி உயரத்தில் பெருமாள்,2.75 அடி உயரம் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும், 2 அடி உயரத்தில் விஷ்ணு, லட்சுமி, கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பத்மாவதி தாயார் மற்றும் திருமங்கை மன்னர் ஆழ்வார் என, 9 ஐம்பொன் உலோக சிலைகள் வரிசையாக இருந்தன. ஆத்துார் வருவாய் துறை அதிகாரிகள், நிலவரை சுரங்கத்தில் இருந்த ஒன்பது ஐம்பொன் உலோக சிலைகளை மீட்டனர்.
இது குறித்து, சேலம் வரலாற்று மைய கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்கள் பி.வீரராகவன், பொன்.வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நிலவரை சுரங்கத்தில் இருந்து முதன்முறையாக, உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 14, 15ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசு மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில், கலைநயமிக்க உலோக சிலைகளை செய்து நிலவரை சுரங்கத்தில் பாதுகாத்து வந்துள்ளனர். பெருமாள் கோவிலில் ராமானுஜர் சிலை இருக்கும். இங்கு, 12 ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை மன்னர் ஆழ்வார் சிலை உள்ளது அரியதாகும், என்றார்.