பதிவு செய்த நாள்
14
ஜூலை
2017
11:07
கோவை: கோவை மண்டலத்தில், கோயில் சொத்துக்களை மீட்டு, அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் அடங்கிய கோவை அறநிலையத் துறை மண்டலத்தில், பட்டியல் சார்ந்த மற்றும் சாராத, 3,000த்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு, நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள், கடைகள் உள்ளிட்ட ஏராளமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றை பலரும் ஆக்கிரமிப்பு செய்து, வர்த்தகம் செய்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால், கோயில் செயல் அலுவலர், அறநிலையத் துறை சட்டவிதிமுறை, 78ன் படி நோட்டீஸ் கொடுத்து, வழக்கு தொடர்வார். அறநிலையத் துறை இணை கமிஷனர் கோர்ட்டில், விசாரணை நடைபெறும். இங்கு பிறப்பிக்கப்படும் தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல், காலதாமதப்படுத்தி, ஆக்கிரமிப்பாளரிடம் கையூட்டு பெற்று, கடையையோ, நில புலன்களை தொடர்ந்து அனுபவிக்கவோ, சில செயல் அலுவலர்கள் அனுமதிக்கின்றனர். இதனால், கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இப்பிரச்கைளுக்கு தீர்வு காண, கோவை மண்டல அறநிலையத் துறை இணை கமிஷனர் அலுவலகம், தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் சாராத கோயில் செயல் அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ’தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கடை, நன்செய் மற்றும் புன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, கோயிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதற்கான பணிகளை வேகப்படுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.