பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
10:07
சபரிமலை: சபரிமலையில், நேற்று அதிகாலை, நிறைபுத்தரிசி பூஜை நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் நடந்தது. பின், நிறைபுத்தரிசி பூஜைகளுக்கான சடங்கு துவங்கியது.
கோவில் முன் உள்ள மண்டபத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, நெற்கதிர்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின், நெற்கதிர் கட்டுகளை, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் தலைமையில் சுமந்து, கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். தொடர்ந்து கோவிலுக்குள் தந்திரி கண்டரரு ராஜீவரரு சிறப்பு பூஜைகள் நடத்திய பின், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.பின், வழக்கமான நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. படி பூஜைக்கு பின், இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோவிலில் கீழ்சாந்திகள் தேர்வுக்கான குலுக்கல், நேற்று சன்னிதானத்தில் நடந்தது. இதில், திருவல்லாவைச் சேர்ந்த கேசவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்; மாளிகைப்புறத்துக்கு திருக்காரியூர் கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.