பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
11:07
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக்கோவிலில், பாறைக்கற்கள் உருக்குலைந்துள்ளதால், கருவறை பகுதியில், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட வில்லை. பல்லவ சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம், சர்வதேசபாரம்பரிய சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பாரம்பரிய கலை ச்சின்னங்களை, ஐக்கிய நாடுகள்சபை கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. கடற்கரையில் அமைந்த அழகிய கற்கோவில், முதலில் அங்கீகாரம் பெற்ற சிறப்பிற்குரியது. ஒரே இடத்தில், சைவ, வைணவ வழிபாடு கருதி, தனித்தனி கருவறை சன்னதிகளுடன், பாறை வெட்டு கற்களால், கி.பி.7ம் நுாற்றாண்டில் இக்கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில், கடற்காற்றின் உப்பு, மாசு படிந்து, இதன் சிற்பங்கள், சுவற்றின் கலை யம்சங்கள் படிப்படியாக அரிக்கப்படுகிறது.
பாறைக்கற்களில் துளைகள் உண்டாகின்றன. விளிம்பு பகுதி மழுங்கி உருக்குலைந்து சீரழிகிறது. சன்னதி பகுதி தாங்கு கற்கள் பலமிழந்து, கீழே விழும் ஆபத்தில் உள்ளது. தொல்லியல் துறை , கோவிலை பராமரித்து பாதுகாத்து வரும் நிலையில், இத்துறையின் வேதியியல் பிரிவு, ரசாயன கலவை பூச்சு மூலம், உப்பு உள்ளிட்ட அழுக்கை அகற்றுகிறது. இத்தகைய பாதிப்புகள் ஒருபுறமிருக்க, சுற்றுலாப் பயணியர், கோவில் பாறை கற்களை கைகளால் பற்றி உரசியும் தேய்கின்றனர். கருவறை சன்னிதி குறுகிய பகுதியில், பயணியரின் மூச்சுக்காற்றாலும் பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படுகிறது. எனவே , மனித மூச்சுக்காற்றால் ஏற்படும் விளைவை ஆராயவும், துளை, தேய்மானத்தை அடைத்து சீரமைக்கவும் முடிவெடுத்தது இத்துறை. சன்னதி சுற்றுப் பகுதியில், பயணியர் உட்செல்வதை தவிர்க்க கருதி, குறுகிய பாதை பகுதி, கடந்த ஜனவரியில் அடைக்கப்பட்டது. இத்துறையின் மாதிரி உருவ கலைஞர்கள், பழமை மாறாமல், துளை அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை சீரமைக்க, தொடர்ந்து ஆராய்கின்றனர். பயணியரால் பாதிக்கப்படாமல் தவிர்க்க, கோவிலை நெருங்காத வகையில் அனுமதிக்கவும், இத்துறை பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே, கருவறை வளாக ஆபத்தை உணராத சுற்றுலா வழிகாட்டிகள் சிலர், பராமரிப்பு பணி என, கருவறை வளாகம் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்படாமல் ஏமாற்றமடைவதாகவும், இதை திறக்க வேண்டும் என்றும் வதந்தி பரப்புகின்றனர்.
கருவறை பகுதியில் பயணியருக்கு தடை: கோவிலை, அழிவிலிருந்தும்,பழமை மாறாமலும் பாதுகாக்க வேண்டும். ஆய்விற்கு பிறகே சீரமைக்க முடியும்; கருவறை சன்னதி பகுதி தாங்கு கற்களும் பலமிழந்துள்ளன. பயணியர் இருக்கும் போது, கற்கள் கீழே விழுந்தால், ஆபத்தாக அமையும். எனவே தான், கருவறை பகுதியை மூடியுள்ளோம்- தொல்லியல்துறையினர் மாமல்லபுரம்