போடி: விவசாயிகளின் நலனுக்காகவும், மழை வேண்டியும் போடி ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு நெற்கதிர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. போடியில் பல மாதங்களாக மழையில்லாததால் ஆறுகள், கண்மாய்கள், விவசாய நிலங்களும் வறண்ட நிலையில் உள்ளன. ஆடி மாதம் துவங்கியும் கூட விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிப்படைந்து வருகின்றனர். போடி ஐயப்ப பக்த சபை சார்பில், விவசாயிகளின் நலன் கருதியும், மழை வேண்டியும் ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. அரவணைப் பாயசத்துடன் கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்க போடி கிளை தலைவர் மணிகண்டன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் முருகன், போடி ஐயப்ப பக்த சபை பொருளாளர் ஆறுமுகம், ஜ.கா.நி., முன்னாள் ஆசிரியர் வண்டலுர் உட்பட நிர்வாகிகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தை பட்டாச்சாரியார் கமலக்கண்ணன் செய்தார்.