பதிவு செய்த நாள்
25
நவ
2011
11:11
அவிநாசி : திருச்சானூரில் நடந்து வரும் பிரம்மோற்சவத்துக்கு, பத்மாவதி தாயாருக்கு சூட்டப்படும் மலர் மாலைகள், கிரீடங்கள் ஆகியன அவிநாசியில் இருந்து செல்கின்றன. திருப்பதி அருகே திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தினமும் நடக்கும் திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்களுக்கு தாயாருக்கு மலர் மாலைகள், மலர்க்கிரீடங்கள் அணிவிக்கப்படும். அம்மாலைகளும், கிரீடங்களும் அவிநாசியில் உள்ள மலர் நிலையத்தில் அழகுற தொடுக்கப்பட்டு, தினமும் திருச்சானூருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. சம்பங்கி, அல்லி, தாமரை, மந்தாரை, மனோரஞ்சிதம், செண்பகம், விருட்சப்பூ, வெண் துளசி, கருந்துளசி, மயிலம், லில்லி, கிளிக்கொன்றை, பலவகை ரோஜா இதழ்கள் உள்ளிட்ட அறுபது வகையான பூக்களிலும், அத்தி, செர்ரி, ஆப்பிரிகட் திராட்சை, மாதுளை, ஏலக்காய், வெண் திராட்சை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பழவகையிலும் மாலைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தாயாருக்கு சூட்டுவதற்கான மலர் கிரீடங்களும் எழிலுற உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
மலர் வியாபாரி பாபு கூறியதாவது: ஆண்டுதோறும் திருப்பதி மற்றும் திருச்சானூரில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்கு மலர் மாலைகள், கிரீடங்களை தயார் செய்து அனுப்புகிறோம். திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் மூலம், இம்மாலைகள் தினமும் திருச்சானூருக்கு செல்கின்றன. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பூ வேலை கலைஞர்களை அவிநாசிக்கு வரவழைத்து மாலைகளையும், கிரீடங்களையும் உருவாக்குகிறோம். அவிநாசியில் இருந்து மலர் மாலைகள், கிரீடங்களை திருச்சானூருக்கு அனுப்புவதை எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம், என்றார்.