பதிவு செய்த நாள்
01
ஆக
2017
02:08
ராம்பூர்: உ.பி., மாநிலத்தில் உள்ள, ஒரு சிவன் கோவிலுக்கு, ஹிந்து, முஸ்லிம் பாகுபாடின்றி, அனைவரும் வந்து பூஜை செய்வதுடன், கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை பெற்று செல்கின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ராம்பூரில் உள்ள பாதாளேஷ்வர் சிவன் கோவிலுக்கு, ஹிந்துக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம் மக்களும் வந்து பூஜை செய்து, பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர். இது குறித்து, கோவில் பூசாரி, நரேஷ் குமார் சர்மா கூறியதாவது: தரிசு நிலமாக இருந்த இந்த இடத்தில், 1788ல், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய நவாப், அகமது அலி கான், ஹிந்து பண்டிதர்களை அழைத்து, கோவில் கட்ட ஏற்பாடு செய்தார்; 1822ல், கோவில் கட்டி முடிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு, அப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களும் வந்து, பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து, பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.