பதிவு செய்த நாள்
07
ஆக
2017
02:08
குளித்தலை: சின்னரெட்டிபட்டி பெரியகாண்டியம்மன் கோவிலில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, பொருந்தலூர் பஞ்சாயத்து, சின்னரெட்டி பட்டி பெரியக்காண்டியம்மன் கோவிலில், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிளக்கு பூஜையானது, கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த பூஜைக்கு வந்த பெண்கள் ஐந்துமுக பித்தளை குத்து விளக்குகளை கொண்டு வந்திருந்தனர். இதில், சங்கு, லட்சுமி விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும், கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. சிறப்பு அம்சமாக, 1,008 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், மாங்கல்யம் நீடித்திருத்தல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில், கல்வியில் சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை, உறவினர்கள் ஒற்றுமை வலியுறுத்தி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தோகைமலை, நாகலூர், பொருந்தலூர், கல்லடை, கழுகூர், கூடலூர், கள்ளை, பாதிரிப்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.