பதிவு செய்த நாள்
29
நவ
2011
10:11
சபரிமலை:மண்டல பூஜைக்காக, 16ம் தேதி மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட பிறகு, எட்டு நாட்களில் கோவில் வருமானம் 20 கோடி ரூபாயை தாண்டியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவம்பர் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் காலை முதல் சிறப்பு பூஜைகள் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கோவிலில் எட்டு நாட்கள், அதாவது 16ம் தேதி மாலை முதல் 24ம் தேதி வரை எட்டு நாட்களில் வருமானம் 20 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரத்து 292 ரூபாயாக அதிகரித்தது. இது கடந்தாண்டு இதே நாளில் கிடைத்த வருவாயை விட, 13 கோடியே 61 லட்சம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ஏழு கோடியே 51 லட்சத்து ஐந்தாயிரத்து 655 ரூபாய் கிடைத்தது.இதுவே கடந்தாண்டு ஐந்து கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 750 ரூபாயாக ஆக இருந்தது. அரவணை பிரசாதம் மூலம் எட்டு நாட்களில் எட்டு கோடியே 76 லட்சத்து 31 ஆயிரத்து 390 ரூபாயும், அப்பம் விற்பனை மூலம் ஒரு கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாயும் கிடைத்தது. இவ்விரண்டு பிரசாத விற்பனையும் கடந்தாண்டை விட அதிகம்.அதேபோல், பம்பையில் ஒரு வாரத்தில் 48 லட்சத்து 52 ஆயிரத்து 935 ரூபாய் வருவாய் கோவிலுக்கு கிடைத்தது. இது கடந்தாண்டு 24 லட்சத்து 68 ஆயிரத்து 771 ஆக இருந்தது. இது கடந்தாண்டு வருவாயை விட இரு மடங்கு அதிகம்.
பலத்த மழை:சபரிமலை செல்லும் பக்தர்கள் அங்கு பெய்துவரும் பலத்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு மலைகளை கடக்க பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பந்தல் அமைத்து தங்குவதற்கு வழியின்றி பல பக்தர்கள் அவதியுற்றனர். மலையேறும் போது சில இடங்களில் வழுக்குவதாலும் பக்தர்கள் மலையேற சிரமப்படுகின்றனர். அடிக்கடி பலத்த மழையும், சில நேரங்களில் லேசான தூறலும் இருந்து வருகிறது. தலையில் சுமந்து செல்லும் இருமுடி கட்டு, மழையில் நனையாமல் இருக்க பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தங்களுடன் கொண்டு செல்லும் பெட்ஷீட், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றால் இருமுடி நனையாமல் கவனித்துக் கொள்கின்றனர். மழை காரணமாக, நேற்றும், நேற்று முன்தினமும் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.